Sunday 26 March 2017

திருமண வரம் தரும் பங்குனி உத்திர விரதம்



சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவமும் சக்தியும் இல்லை என்றால், உலக இயக்கமே இல்லை. சிவசக்தி சங்கமத்தால் தான் இந்த உலகில் அனைத்தும் இயங்குகின்றன. சிவசக்தி தத்துவத்தை உணர்த்தும் புனித தினம் பங்குனி உத்திரம். அன்று பரமேஸ்வரனுக்கும் பார்வதிக்கும் திருமண வைபவம் நடத்தப்படுகிறது. இது சிவசக்தி தத்துவத்தை உணர்த்துகிறது. 

பங்குனி மாதம் "பூமி, மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம். சந்திரன் கன்னி ராசியில் உத்திர நட்சத்திரத்தோடு," பங்குனி மாதத்தில் வரும் நாள் பங்குனி உத்திரம்.

இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
வேண்டுவோருக்கு வேண்டுவதை வழங்கி அருளும், தேவ தேவியரை இத்தினத்தில் தேவர்களும் வழிப்பட்டு விரதம் இருந்து வரம் பெற்று உள்ளனர்.

திருமகள் மகாவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேற்றினைப்பெற்றாள். பிரம்மன் இவ்விரதத்தை கடைப்பிடித்து தான், சரஸ்வதியை தன் நாவில் வைத்துக்கொள்ளும் நிலையை அடைந்தார். இந்திரன், இந்திராணியை அடைந்தான் என புராணங்கள் கூறுகின்றன.

பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடையப்பெற்றது முக்கியமானது. ஒருமுறை உமாதேவி தக்கனுக்கு மகளாக பிறந்து வளர்ந்தார். ஆணவத்தினால் தக்கன் சிவபெருமானை இகழ்ந்தான். இதனால் வெகுண்டெழுந்த தாட்சாயிணி யாக குண்டத்தில் வீழ்ந்தார். தக்கனுக்கு மகளாக பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தை போக்கி கொள்வதற்காக, பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாக தோன்றினார். அப்போது காஞ்சீபுரத்தில் கம்பை ஆற்றில் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டார். திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. ஆற்று நீரில் மணலால் செய்த சிவலிங்கம் சிதைந்து விடுமே என்று பதறிய உமையம்மை, சிவலிங்கத்தை மார்போடு அணைத்து தழுவினாள். அவரது அன்பை பார்த்து வியந்த பரமேஸ்வரன் அங்கு தோன்றி, உமையம்மையை திருமணம் செய்து கொண்டார். அந்நாளே பங்குனி உத்திர திருநாள் ஆகும். பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் திருக்கல்யாண விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை

பங்குனி உத்திர விரதத்தை 8 வயதிற்கு மேற்பட்டவர்களும், 80 வயதுக்கு உட்பட்டவர்களும் மேற்கொள்ளலாம். விரதம் இருப்பதற்கு முன்தினம் இயல்பாக உண்பதைவிட, குறைவாக உண்ண வேண்டும். அன்று மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் ஒரு வேளை உண்ணலாம். பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பவர்கள் காலைக்கடனை முடித்து விட்டு, பூஜை பாராயணங்களை செய்து முடிக்க வேண்டும்.
அன்று சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து, தூப,தீப நைவேத்தியங்களை செய்ய வேண்டும். ஒரு தம்பதியினரை அழைத்து வந்து, அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும். சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.
அன்று முழுவதும் இறைவனைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி ஒன்றை விரித்துப் படுக்க வேண்டும்.

பக்தனுக்கு மணம் முடித்த ஈசன்
சிவபெருமானின் திருநாமம் நந்தி. நந்தி நாமம் நமச்சிவாயவே என்பார் திருஞானசம்பந்தர். துர்வாசருடைய மாணவரான சிலாத முனிவர், வசிட்டரின் சகோதரி சாருலட்சணையை மணந்து கொண்டு குழந்தை வரம் வேண்டி தவம் இருந்தார். இவரது தவத்துக்கு மனம் இரங்கிய ஐயாறப்பர் அருளிய வாக்கின்படி, சிலாத முனிவர் வேள்வி செய்த நிலத்தை உழுத போது ஒரு செப்பு பெட்டகம் கிடைத்தது. அதில் சிவ வடிவுடன் கூடிய குழந்தை கிடைத்தது. அந்தக் குழந்தைக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டப்பட்டது. சிவபெருமான் செப்பேசருக்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கங்கையின் நீர், இறைவியின் கொங்கைநீர், இடப வாய் நுரை நீர் ஆகிய ஐந்து வகை தீர்த்தங்களால் அபிசேகம் செய்து, தங்கப்பட்டம் அணிவித்து நந்தீஸ்வரர் எனப்பெயர் சூட்டினார். அத்துடன் இறைவன் தமக்குச் சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு தலைமை தாங்கும் பதவியையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும் நந்திகேஸ்வரருக்கு வழங்கினார். இறைவன் நந்தீஸ்வரருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி திருமழப்பாடியில் வசித்து வந்த வசிட்டரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்சாம்பிகை என்ற பெண்ணை பேசினார். நந்தீஸ்வரருக்கும், சுயம்சாம்பிகைக்கும் பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் திருமணம் நடந்தது. இதற்காக திருவையாறில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருமழப்பாடிக்கு, நந்தீஸ்வரர் குதிரை வாகனத்திலும், ஐயாறப்பர் சமேத அறம் வளர்த்த நாயகி வெட்டிவேர் பல்லக்கிலும் செல்லும் நிகழ்ச்சி இன்றளவும் நடைபெறுகிறது.b அவர்களை திருமழப்பாடியில் வீற்றிருக்கும் இறைவன் வைத்தியநாதரும், இறைவி சுந்தராம்பிகையும் கண்ணாடி பல்லக்கில் வந்து மாப்பிள்ளை வீட்டாரை எதிர் கொண்டு அழைக்கின்றனர். அன்று மாலை நந்தீஸ்வரர், சுயம்சாம்பிகை திருமணம் தாலி கட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது. பின்னர் புதுமணத் தம்பதிகளுடன் இறைவன் ஐயாறப்பர், தர்ம சம்வர்த்தினி திருவையாறு புறப்பட்டு வருகின்றனர்.

திருவையாறை புராதனமாக கொண்டு திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம் ஆகிய ஏழு ஊர்களில் வலம் வருதலே சப்தஸ்தான விழாவாகும்.
திருமழப்பாடியில் நந்தி பெருமானுக்கு சுயம்சாம்பிகையை ஐயாறப்பர் திருமணம் செய்துவைத்தார். அந்த திருமணத்துக்காக திருப்பழனத்தில் இருந்து பழ வகைகள், திருச்சோற்றுத்துறையில் இருந்து உணவு வகைகள், திருவேதிக்குடியில் இருந்து வேத பிராமணர்கள், திருக்கண்டியூரில் இருந்து ஆபரணங்கள், திருப்பூந்துருத்தியில் இருந்து மலர்கள், திருநெய்தானத்தில் இருந்து நெய் வந்தன.
அதற்கு நன்றி செலுத்தவும்,, ஏழூர்களில் உள்ள ஏழு முனிவர்களாகிய * சிலாதராசிரமம் - திருவையாறு, 
* கவுசிகா ஆசிரமம் - திருப்பழனம்
* கவுதமராசிரமம் - திருச்சோற்றுத்துறை,
* வியாசராசிமம் - திருவேதிக்குடி,
* சத்தபராச்சிரமம் - திருக்கண்டியூர்,
* காசிய பராசிரமம் - திருப்பூந்துருத்தி,
* பிருகு முனிவர் - திருநெய்தானம்
ஆகிய ஆசிரமங்களுக்கு சென்று அவர்களிடம் ஆசி பெறுவதற்காக புதுமண தம்பதிகளை அழைத்துச்செல்வதே ஏழூர் வலம் வருதலின் நோக்கமாகும்.

பூம்பாவையை உயிர்ப்பித்த சம்பந்தர்
சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்ற வணிகர் இருந்தார். அளவு கடந்த சிவ பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற மகள் இருந்தாள். திருஞான சம்பந்தரின் புகழைக்கேட்ட அவர், தனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணி இருந்தார். போதாத காலம் பூம்பாவை நந்தவனத்தில் பூக்களை பறித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு பாம்பு தீண்டி இறந்து விட்டாள். சிவநேசர் மனம் கலங்கினார். மகளின் உடலை தகனம் செய்து பெற்ற சாம்பலையும், எலும்பையும் சேர்த்து பொற்குடத்தில் இட்டு வைத்து இருந்தார். அவர் எதிர்பார்த்த படி திருஞானசம்பந்தர் அவ்வூருக்கு வந்தார். மயிலாப்பூரில் பூம்பாவை இறந்த செய்தியையும் சிவநேசர், எலும்பையும் சாம்பலையும் பொற்குடத்தில் இட்டு வைத்து இருப்பதையும் சம்பந்தர் அறிந்து கொண்டார். சிவநேசரும் சம்பந்தரை சந்தித்தார். பின்னர் சம்பந்தர் எலும்புகளும், சாம்பலும் அடங்கிய பொற்குடத்தை எடுத்து, கபாலீஸ்வரர் கோவிலில் வைத்தார். அன்று கபாலீஸ்வரர் கோவில் உற்சவ தினத்தில் ஒன்பதாம் நாள். பங்குனி உத்திர திருநாள்.அந்த இனிய திருநாளில் சம்பந்தர் ஒரு தேவாரப் பதிகத்தைப் பாடினார்.

"மலிவிழா வீதிமட நல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான்
கபாலீச்சரம்மர்ந்தான் பலிவிழாப் பாடல்செய்
பங்குனியுத்தரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்..."

என்று தொடங்கும் திருப்பதிகத்தை பாடினார். அப்போது அங்கு அதிசயம் நிகழ்ந்தது. பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வந்தாள். அவளை மணந்து கொள்ளும்படி சிவநேசர் கேட்டுக்கொண்டார். ஆனால் உயிர் கொடுத்தவர் தந்தைக்கு சமம் என்பதால், பூம்பாவையை திருமணம் செய்ய சம்பந்தர் மறுத்து விட்டார். இதன் மூலம் சம்பந்தர் காலத்திலும், பங்குனி உத்திரவிழா சிறப்புற்று விளங்கியது தெரிய வருகிறது.
சுந்தரமூர்த்தி நாயனாரும், அவருடைய துணைவியார் பரவை நாச்சியாரும் கூட பங்குனி உத்திர விழாவை சிறப்பாக கொண்டாடியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.