Monday, 9 January 2017

பிறவாப்பெருவாழ்வு தரும் வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியில் திசம்பர்-சனவரி மாதங்களில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.
மோகினி   அலங்கார  தத்துவம் 
வைகுண்ட ஏகாதசியின் போது பகல்பத்து திரு நாளில் 10–ம் திருநாள் எம்பெருமான் மோகினி அலங்காரத்துடன் காட்சி தருவார். மனிதன் வாழ்வில் மண், பொன், பெண் ஆசைகளை கடக்க முடியாது. இதில் பெண்ணாசையை வெல்வது கடினம். திருப்பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை அசுரர்களுக்கு கிடைக்காமல் செய்வதற்காக திருமால் மோகினி வேடம் தாங்கினார். அதில் மயங்கிய அசுரர்கள் அமிர்தத்தை இழந்தனர். பெண்ணாசையால் மதி இழக்காமல் இறைவன் காட்டிய மார்க்கத்தில் சென்றால் வைகுண்டம் நிச்சயம் என்பதை பக்தர்களுக்கு ரெங்கநாதர் உணர்த்துகிறார். இதுவே மோகினி அலங்கார தத்துவமாகும்.

தங்க  பல்லியை வணங்கும்  பக்தர்கள் 
ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கும் போது பக்தர்கள் கூட்டம், கூட்டமாக உள்ளே செல்வார்கள். அப்போது வாசலுக்கு மேலே சிற்ப வடிவமாக இரண்டு தங்க பல்லிகள் பதிக்கப்பட்டிருக்கும். அதை பக்தர்கள் பயபக்தியுடன் வணங்குவார்கள். அதாவது பல்லி புவி ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்படாமல், தானே சுற்றுச்சுவர்களிலும், மேற் சுவர்களிலும் வேகமாக ஊர்ந்து செல்லும் இயல்புடையதாகும். அது போல பக்தர்கள் உலக பந்தங்களில் பற்று வைக்காமல், விலகி சென்றால் இறைவனின் சொர்க்கவாசல் அவர்களுக்கு கிடைக்கும் என்பதே அதன் தத்துவம்.
சமய நம்பிக்கை
இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.

சொர்க்கவாசல் திறக்கப்படுவது  ஏன்?

சொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் கூறப்படும் கதை வருமாறு:–

அவதார புரு‌ஷரான எம்பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக்கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது. 


பகவத்கீதை  உபதேசித்த  தினம்
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த குருஷேத்திர யுத்தத்தின்போது அர்ச்சுனன் மனம் தளர்ந்து காண்டீபம் வில்லை கீழே வைத்து விட்டு போரிட மறுத்து விடுகிறான். வைகுண்ட ஏகாதசியன்று  பகவான் கண்ணன், அர்ச்சுனனுக்கு பகவத்கீதையை உபதேசம் செய்தார். 
சொர்க்கத்தை விரும்பாத  அனுமன்
ஸ்ரீராமதூதன் அனுமன் ராமனுக்கு சேவை செய்வதையே தன் பிறவிக் கடன் என நினைப்பவர். அனுமனுக்கு அருள் செய்ய நினைத்த ராமர் அனுமனை பார்த்து, ‘நீ பரமபதத்துக்கு (சொர்க்கம்) வருகிறாயா?’ என்று கேட்டார். அதற்கு அனுமன் இந்த பூவுலகம் உங்கள் பாதம் பட்டதால் புண்ணிய பூமி ஆயிற்று. அமிர்தத்தைவிட மேலான ராமநாமத்தை சொல்லி பரமபதத்தில் கூத்தாட முடியாது. எந்த சிறப்புமே இல்லாதது பரமபதம். பூமியில் உங்கள் திருப்பெயரைச் சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியாக இருப்பேன். பரமபதத்துக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டார். ராமனும் அனுமனின் பக்தியை கண்டு மகிழ்ந்து என்றும் அழியாமல் இருக்கும் சிரஞ்சீவி பட்டத்தை வழங்கினார். அஸ்வத்தாமர், மகாபலி, வியாசர், அனுமன், கிருபாச்சாரியார், பரசுராமர், விபீ‌ஷணர், மார்க்கண்டேயர் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் ஆவர். 
திருவரங்கத்தில்
தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது. ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரம்பத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.

திருமலையில்
ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது. எனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்களும் உயர்நிலையாளர்களும் திரள்கின்றனர்.

தீபஜோதியில்   ஜொலிக்கும் குருவாயூரப்பன்   கோவில்
கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை விருட்சிக ஏகாதசி என்ற பெயரில் கொண்டாடுவர். குருவாயூரில் ஏகாதசி விழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது தீப ஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றி கோவிலை சொர்க்கலோகம் போல மாற்றி கொண்டாடுவர். 
ஏகாதசியன்று காலை 3 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோவில் திறந்தே இருக்கும். ஏகாதசியன்று குருவாயூரப்பனை தரிசித்தால் சொர்க்க வாசலை மிதித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 
சொர்க்கவாசல்  திறக்காத பெருமாள்  கோவில்கள்
* கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. மகாலட்சுமியை மணமுடிப்பதற்காக திருமால் வைகுண்டத்தில் இருந்து தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். இங்கு உத்திராயன, தட்சிணாயன வாசல்கள் தனித்தனியாக உள்ளன. இந்த வாசல்களை கடந்து சென்றாலே பரமபதம் (மோட்சம்) கிடைக்கும் என்பது ஐதீகம். 

* அதேபோல திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாசன் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவியை மணமுடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக வந்ததால் இக்கோவில் பூலோக வைகுண்டமாக திகழ்கிறது. இங்கும் வைகுண்ட ஏதாசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. தாயார் நாமம் செங்கமலதாயார். இங்கும் தட்சிணாயன, உத்தராயண வாசல் உள்ளது. திருச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.


No comments:

Post a Comment