அனுமனின் தரிசனமும் அருளும் பெற்றிட...



பக்திக்கு ஓர் இலக்கணம் வகுத்தவர் ஆஞ்சநேயர். ஶ்ரீராம பிரானிடம் அவர் கொண்டிருந்த பக்திக்கு எல்லையே இல்லை. அதற்கு ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடலாம். ராவண வதத்துக்குப் பிறகு அயோத்திக்குத் திரும்பி பட்டாபிஷேகம் நடைபெற்றது. பட்டாபிஷேக வைபவம் முடிந்ததும், ராவணனுடன் தான் செய்த யுத்தத்தில் உதவிபுரிந்த ஒவ்வொருவருக்கும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். அப்போது சீதா பிராட்டியார், தன்னை ராமபிரானுடன் சேர்த்து வைத்த அனுமனுக்கு பரிசு தர விரும்பினார். ராமபிரானின் அனுமதியுடன் தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை பரிசாக வழங்கினார். அனுமன் அந்த மாலையில் இருந்த முத்துக்களை பிய்த்து ஒவ்வொன்றாக கடித்துத் துப்பினார். அதைக் கண்ட சீதா பிராட்டியார், தான் அன்புடன் கொடுத்த மாலையை அனுமன் இப்படி கடித்துத் துப்புகிறாரே என்று ராமபிரானிடம் முறையிட்டார். உடனே ராமபிரான் அனுமனைப் பார்த்து, ''ஆஞ்சநேயா, பிராட்டியார் கொடுத்த மாலையை அணிந்துகொள்ளாமல், ஏன் இப்படி கடித்துத் துப்புகிறாய்?'' என்று கேட்டார். அதற்கு ஆஞ்சநேயர், ''பிரபோ, தங்கள் திருநாமத்தை உச்சரிக்கும்போது என்னுடைய நாவெல்லாம் இனிக்கும்.  இந்த முத்துக்களிலும் அப்படி ஒரு ருசி இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றுகூட ருசியாக இல்லை. அதனால்தான் துப்புகிறேன்'' என்றார். அப்படிப்பட்ட அனுமனுக்கு என்ன பரிசுதான் ஈடாகும் என்று சிந்தித்த ராமபிரான், அனுமனை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார். தன் இதயத்தில் பிராட்டியுடன் ராமபிரான் இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காக அவர் தன்னுடைய மார்பை பிளந்துகாட்டியதாகவும் சொல்லப்படுவது உண்டு.

அனுமனின் தரிசனமும் அருளும் பெற்றிட...
ஆஞ்சநேயர் பக்தர்கள் கேட்கும் அனைத்து வரங்களையும் உடனுக்குடன் அருள்பவர். அவருடைய அருளைப் பெறுவதற்கு மிகச் சிறந்ததும் எளிமையானதுமான ஒரே வழி ராம நாமத்தை ஜபிப்பதுதான். அதைப் பற்றிய ஒரு ஸ்லோகமே உள்ளது. அந்த ஸ்லோகம்.

"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்"

எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள்   இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள். பக்திபூர்வமாக ராமநாமம் ஜபிக்கும் அனைவரும் ஆஞ்சநேயரின் அருளைப் பெற்று சிறக்க வாழலாம்.

ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
ஆஞ்சநேயரை வழிபடுவதால் அறிவு, வலிமை, புகழ், துணிவு, அச்சமில்லாமை, நோய் இல்லாத வாழ்வு, செயல்படுவதில் ஊக்கம், வாக்கு வன்மை இவை அனைத்தையும் தம்மை வழிபடுபவர்களுக்கு அருள்புரிபவர் ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயர் ஜயந்தி...
ஆஞ்சநேயரின் ஜயந்தி, மற்ற ஜயந்திகளை விடவும் மேலான ஜயந்தி என்றே சொல்லலாம். அனுமத் ஜயந்தியை நாம் கொண்டாடுவதால், எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். ராமநாமம் ஜபித்து  ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர் உடனே நமக்கு அருள்புரிவார் என்பது உறுதி. ஆஞ்சநேயரை வழிபடும்போது நாம் ஜபிக்க வேண்டிய ஸ்லோகம்.


''ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராணனே''

ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளும் கிடைக்கும் பலன்களும்
 ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால், திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறும்.
 வடைமாலை சாத்தி வழிப்பட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்
துளசி மாலை சாத்தி வழிப்பட்டால் தீராத நோய்களும் தீரும்.
ஆஞ்சநேயர் கழுத்தில் ஸ்ரீ ராம ஜயம் எழுதி மாலை கட்டி போட்டால் சகல காரியமும் வெற்றி பெறும்.

ஆஞ்சநேயருக்கு முதலில் வெற்றிலை மாலை கொடுத்தது யார்?

ராமபிரான் ராவணனை வதம் செய்து வெற்றி பெற்றார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டிக்குத் தெரிவிக்கச் சென்றார் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் சொன்ன வெற்றிச் செய்தி பிராட்டியின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. சந்தோஷத்தில் திளைத்த பிராட்டி, ஆஞ்சநேயருக்கு என்ன பரிசு தரலாம் என்று யோசித்தபோது, பக்கத்தில் படர்ந்திருந்த வெற்றிலைக் கொடி கண்களில் பட்டது. உடனே அந்தக் கொடியைப் பறித்து ஆஞ்சநேயருக்கு அளித்து, ''வெற்றிச் செய்தி சொல்ல வந்த உனக்கு இந்த வெற்றிலை மாலையை அளிக்கிறேன். ஏற்றுக்கொள்'' என்று கூறி அளித்தார். அதனால்தான் ஆஞ்சநேயருக்கு நாம் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment