திருமால் என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக அறியப்பெறுகிறார். இவர் விஷ்ணு, கேசவன், பெருமாள் என்றும் அறியப்பெறுகிறார். தமிழர்களின் முல்லைநிலத் தெய்வமாக வணங்கப்பட்ட மாயோன் தெய்வமாக திருமால் அறியப்பெறுகிறார். சங்ககாலத் தமிழ்ப்பாடல்களில் மாயோன் வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மால், மாலன், மாலவன், பெருமால் என்றும் அறியப்பெறுகிறார். சந்திர குலமான யது குலத்தில் பிறந்தவர். இவர் இவ்வுலகை விட்டு பிரிந்தவுடன் அம்மக்கள் இவரை நடுகல் வைத்து வணங்கினர். நாளடைவில் அதுவே திருமால் வழிபாடாக அமைந்தது திருமால் சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் என்ற பஞ்சாயுதங்களை கொண்டவராகவும், பாற்கடலில் திருமகளுடன் ஆதிசேசனின் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவருடைய வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாலக்கிராமமும் கருதப்படுகிறது.
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது. நின்ற கோலத்தில் திருப்பதி போன்ற தலங்களில் அருளுகிறார். மும்மூர்த்திகள் வழிபாட்டில் இவர் காக்கும் தொழில் செய்யும் கடவுள். மற்றவர்களான பிரம்மா படைக்கும் தொழில் செய்பவர். சிவபெருமான் அழித்தல் தொழில் செய்பவர். பிரம்மன் இவருடைய தொப்புள்கொடியிலிருந்து தோன்றியவராகப் புராணங்கள் கூறுகின்றன. அறம் குறித்த சிந்தனைகளும் அதைத்தொடர்ந்த செயல்களும் குறையும்பொழுது தசாவதாரம் முதலிய எண்ணற்ற அவதாரங்களை எடுத்து அதை சரிசெய்கிறார். இவருடைய ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் பரவலாக வணங்கப்படுகின்றது.
கம்பராமாயணம், வில்லிபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர் பாரதம் போன்ற பல வைணவநூல்கள் திருமாலுடைய புகழை கூறுகின்றன. இதிகாசமான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் மையப்படுத்தி எழுதப்பெற்றுள்ளது. பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களடங்கிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிறது. மச்சபுராணம், வாமன புராணம் என பன்னிரு புராண நூல்களில் திருமாலின் பெருமை விவரிக்கப்பட்டுள்ளதுடன், புத்தரும் சமணரும் இவருடைய அவதாரங்கள் என்கின்றன.
குணநலன்கள்
திருமாலின் குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன,..
- வாத்சல்யம் - தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
- சுவாமித்துவம் - கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.
- சௌசீல்யம் - ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.
- சௌலப்யம் - கடவுளின் எளிமையை குறிப்பது.
இந்த நான்கு குணங்களும் திருமாலுடைய கிருஷ்ண அவதாரத்தில் வெளிப்பட்டதாகவும் கருதப்பெறுகிறது. அர்ஜூனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை வாத்சல்யமாகவும், அர்ஜூனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை சுவாமித்தரமாகவும், குசேலனிடம் நட்பு பாராட்டியமை சௌசீல்யமாகவும், இறைவனாகிய திருமாலே மனித உருவெடுத்து அவதரித்தமை சௌலப்யமாகவும் சொல்லப்பெறுகிறது
திருமாலின் அவதாரங்கள்.
உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது திருமால் உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இதற்காகத் திருமால் எடுத்த அவதாரங்களை சப்தாவதாரம், தசாவதாரம் என எண்ணிக்கை அடிப்படையில் குறித்துவைக்கின்றனர். பாகவத புராணத்தில் திருமால் இருபத்தைந்து அவதாரங்களை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
திருமாலின் அவதாரங்களை அவதாரம், ஆவேசம், அம்சம் என பிரிக்கின்றார்கள்.
- அவதாரம் - முழு சக்தியை கொண்டது.
- ஆவேசம் - தேவையின் போது மட்டும் சக்தி கொண்டவனாகுதல்.
- அம்சம் - திருமால் சக்தியின் ஒரு பகுதி ஓர் உருக்கொண்டு வெளிப்படுவது.
சப்தாவதாரம்
அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் மனைவியை திருமால் கொன்றதால், சுக்கிராச்சாரியார் திருமாலை ஏழுமுறை மனிதனாக பூமியில் பிறக்கும் படி சபித்தார். இதனால் தத்தாத்ரேயர், பரசுராமர், இராமர், வியாசர், கிருஷ்ணன், உபேந்திரன், கல்கி முதலிய ஏழு அவதாரங்களும் சப்தாவதாரங்களை திருமால் எடுத்ததாக வாயு புராணம் கூறுகிறது.
தசாவதாரம்
திருமாலும், திருமகளும் பாற்கடலில் தனித்திருக்கும் வேளையில் சில முனிவர்கள் திருமாலைக் காண வந்தார்கள். அவர்களை ஜெய விஜய எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த திருமால் தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ளும்படி செய்ததாகத்க் தசாவதாரங்களுக்கு காரணம் சொல்லப்படுகிறது.
பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:
- மச்ச அவதாரம்
- கூர்ம அவதாரம்
- வராக அவதாரம்
- நரசிம்ம அவதாரம்
- வாமண அவதாரம்
- பரசுராம அவதாரம்
- இராம அவதாரம்
- பலராம அவதாரம் / கௌதம புத்தர்
- கிருஷ்ண அவதாரம்
- கல்கி அவதாரம்
பௌத்த மதத்தினை தோற்றுவித்தவரான கௌதம புத்தர் திருமாலின் தசாவதாரங்களில் ஒருவராக கருதப்படுகிறார். இதுகுறித்து புராணங்களில் செய்தியுள்ளது. அத்துடன் மகாபலிபுரத்தில் அரியரன் சிற்பத்தின் மேல் உள்ள கல்வெட்டொன்றில் தசாவதாரம் குறித்து கீழ்க்கண்ட வடமொழி சுலோகம் எழுதப்பெற்றுள்ளது.
- மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ
- ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா:
(ஆனால் வைணவ நூல்களில் புத்தர் குறித்த குறிப்புகள் இல்லை.)
கடவுளுடனான உறவு
சிவன்
சைவக்கடவுளான சிவபெருமானின் மனைவியான சக்தியின் அண்ணன் என்று விஷ்ணு போற்றப்படுகிறார். அதன் காரணமாக சிவமைந்தர்களான விநாயகருக்கும், முருகனுக்கும் மாமனாக அறியப்படுகிறார்.
தாருகாவனத்தில் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிட்சாடனார் வடிவெடுத்து சென்று ரிஷிபத்தினிகளை கவர்ந்ததைப் போல, அவருடன் திருமால் மோகினி வடிவெடுத்து சென்று ரிஷிகளை வசப்படுத்தியதாக இந்து தொன்மவியல் கதைகள் கூறுகின்றன.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றப் பின்பு, அமுதத்தினை அசுரர்கள் அருந்தினால் சாகாவரம் பெற்றவர்களாக ஆகிவிடுவார்கள் எனப் பயந்த தேவர்கள், திருமாலிடம் வேண்டினர். திருமாலும் மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு மட்டும் அமுதம் கிடைக்கப்பெறச் செய்தார். இந்நிகழ்வின் பொழுது மோகினி அவதாரத்தினைக் காண இயலாத சிவபெருமான் திருமாலின் மீண்டும் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாகவும், அவரின் வேண்டுகோளுக்கினங்கி மோகினியாக மாறிய திருமாலுடன் சிவபெருமான் உறவாடியதாகவும் ஒரு கதையுண்டு. இவர்கள் இருவருக்கும் ஐயப்பன் பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
திருமால் நாமாவளி
திருமால் நாமாவளி என்பது திருமாலின் வேறுபட்ட பெயர்களின் தொகுப்பாகும். நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். கோவிந்த நாமாவளி, சத்யநாராயண அஷ்டோத்திர சதநாமாவளி, விஷ்ணு சஹஸ்ரநாமம் அவற்றில் குறிப்பிடத்தக்கன. இதில் விஷ்ணு சஹஸ்ரநாமம் வைணவத்தலங்களில் மந்திரமாக மூலவரின் முன் மட்டுமல்லாது பெரும்பான்மையானோரால் தினமும் இல்லத்திலும் ஓதப்படுவதாக உள்ளது.
திருமாலின் ஆயிரம் பெயர்கள்
திருமாலின் ஆயிரம் பெயர்களை கோர்வையாக ஒருங்கினைத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற தொகுப்பாக விசாயர் அருளியுள்ளார். இது விஷ்ணு ஸ்ஹஸ்ர நாமாவளி என்ற பெயரிலும் அழைக்கப்பெறுகிறது. மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு போர்க்களத்தில் திருமாலின் பெயர்களைக் கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது. ரா.நரசிம்மன் என்பவர் இத்தொகுப்பினை தமிழில் எழுதியுள்ளார். இவ்வாறான நாமாவளிகளுக்கு உரை எழுதுவது பாஷ்யம் என்று அழைக்கப்பெறுகிறது. விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு ஆதிசங்கரரால் உரையெழுதப்பெற்றது என்ற நம்பிக்கையுள்ளது.
இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தினை நூறு பேர் ஒரே சமயத்தில் வாசிப்பதை விஷ்ணு சகஸ்ரநாம லட்சார்ச்சனை என்கிறார்கள். இது வைணவத் தலங்களில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் லட்சார்ச்சனை விழா என்ற பெயரில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment