Wednesday 11 January 2017

காலனை உதைத்த கால்!


" வெறி கொண்ட காலனை உதைத்த கால் உனது கால் ,
 அதனால் தூக்கி நின்றான் " .

காலனை உதைத்த கால் உமையவளுக்குச் சொந்தமான இடது கால் அதனால் அதற்கு மதிப்புக் கொடுப்பது போல , நடராஜர் , காலைத் தூக்கி ஆடியபோது , அந்தக் காலைத் தூக்கி ஆடினார் என்று இதற்குப் பொருள். கருணையின் வடிவமே உமையவள். அவளை வணங்கினால் நாம் எல்லா நலன்களும் பெறலாம். அவள்தான் மதுரையில் மீனாட்சியாகப் பிறக்கிறாள் . மதுரையை ஆண்ட அவள் திக் விஜயம் கிளம்புகிறாள். பூவுலகில் அவளை எதிர்த்து நிற்பார் யாருமில்லை . எல்லாரும் சரண் அடைந்து விடுகிறார்கள். உடனே, மீனாட்சி அஷ்டதிக் பாலகர்கள் மீது பாய்கிறாள் .அவர்களும், சரணடைகிறார்கள். கடைசியில் தென் திசைக் காவலனான யமனாவது தன்னை எதிர்த்து நிற்பானா என்று நினைக்கிறாள் .
அவனோ , அவள் காலில் விழுந்து 
   "தாயே! எனக்கு உயிர் கொடுத்த உமையவளே! உன்னை நான் எதிர்த்துப் போரிடலாமா! அது நீதியாகுமா! அப்படி எதிர்த்துப் போரிட்டாலும் உன்னை நான் வெல்ல முடியுமா! " 
                                                                                                 என்று கேட்கிறான் .
             "நான் உனக்கு உயிர் கொடுத்தேனா! எப்பொழுது?" 
                                                                               என்று கேட்கிறாள் மீனாட்சி .


                                      "ஏனம்மா! மார்க்கண்டேயரை மறந்து விட்டாயா? அவருக்குக் கொடுக்கப்பட்ட பதினாறு வயது ஆயுள் முடிந்துவிட , அவர் உயிரை எடுக்க நானே வந்தேன். அப்பொழுது, அவர் சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ள, நான் அதையும் சேர்த்து என் பாசக் கயிற்றினால் இழுத்தேன். அதைக் கண்டு கோபம் கொண்ட சிவன் என்னை உதைக்கப் போனார். பிறர் உயிரை வாங்கும் என் உயிரையே அவர் வாங்கிவிடுவாரோ என்று நடுங்கினேன். உன்னை மனதார வேண்டிக் கொண்டேன். அதன் காரணமாக, அவர் என்னை உதைத்த கால் உனது கால், ஆதலால் நான் பிழைத்தேன்" 
                                                             என்கிறான் யமன் .இதைக் கேட்டு மீனாட்சி அவன் மீது கருணை கூர்கிறாள். அந்த கருணைதான் அவளைச் சிவனைச் சந்திக்கச் செய்து, அவனோடு மணம் முடித்து வைக்கிறது .

No comments:

Post a Comment