Sunday 26 March 2017

திருமண வரம் தரும் பங்குனி உத்திர விரதம்



சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவமும் சக்தியும் இல்லை என்றால், உலக இயக்கமே இல்லை. சிவசக்தி சங்கமத்தால் தான் இந்த உலகில் அனைத்தும் இயங்குகின்றன. சிவசக்தி தத்துவத்தை உணர்த்தும் புனித தினம் பங்குனி உத்திரம். அன்று பரமேஸ்வரனுக்கும் பார்வதிக்கும் திருமண வைபவம் நடத்தப்படுகிறது. இது சிவசக்தி தத்துவத்தை உணர்த்துகிறது. 

பங்குனி மாதம் "பூமி, மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம். சந்திரன் கன்னி ராசியில் உத்திர நட்சத்திரத்தோடு," பங்குனி மாதத்தில் வரும் நாள் பங்குனி உத்திரம்.

இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
வேண்டுவோருக்கு வேண்டுவதை வழங்கி அருளும், தேவ தேவியரை இத்தினத்தில் தேவர்களும் வழிப்பட்டு விரதம் இருந்து வரம் பெற்று உள்ளனர்.

திருமகள் மகாவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேற்றினைப்பெற்றாள். பிரம்மன் இவ்விரதத்தை கடைப்பிடித்து தான், சரஸ்வதியை தன் நாவில் வைத்துக்கொள்ளும் நிலையை அடைந்தார். இந்திரன், இந்திராணியை அடைந்தான் என புராணங்கள் கூறுகின்றன.

பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடையப்பெற்றது முக்கியமானது. ஒருமுறை உமாதேவி தக்கனுக்கு மகளாக பிறந்து வளர்ந்தார். ஆணவத்தினால் தக்கன் சிவபெருமானை இகழ்ந்தான். இதனால் வெகுண்டெழுந்த தாட்சாயிணி யாக குண்டத்தில் வீழ்ந்தார். தக்கனுக்கு மகளாக பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தை போக்கி கொள்வதற்காக, பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாக தோன்றினார். அப்போது காஞ்சீபுரத்தில் கம்பை ஆற்றில் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டார். திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. ஆற்று நீரில் மணலால் செய்த சிவலிங்கம் சிதைந்து விடுமே என்று பதறிய உமையம்மை, சிவலிங்கத்தை மார்போடு அணைத்து தழுவினாள். அவரது அன்பை பார்த்து வியந்த பரமேஸ்வரன் அங்கு தோன்றி, உமையம்மையை திருமணம் செய்து கொண்டார். அந்நாளே பங்குனி உத்திர திருநாள் ஆகும். பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் திருக்கல்யாண விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை

பங்குனி உத்திர விரதத்தை 8 வயதிற்கு மேற்பட்டவர்களும், 80 வயதுக்கு உட்பட்டவர்களும் மேற்கொள்ளலாம். விரதம் இருப்பதற்கு முன்தினம் இயல்பாக உண்பதைவிட, குறைவாக உண்ண வேண்டும். அன்று மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் ஒரு வேளை உண்ணலாம். பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பவர்கள் காலைக்கடனை முடித்து விட்டு, பூஜை பாராயணங்களை செய்து முடிக்க வேண்டும்.
அன்று சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து, தூப,தீப நைவேத்தியங்களை செய்ய வேண்டும். ஒரு தம்பதியினரை அழைத்து வந்து, அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும். சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.
அன்று முழுவதும் இறைவனைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி ஒன்றை விரித்துப் படுக்க வேண்டும்.

பக்தனுக்கு மணம் முடித்த ஈசன்
சிவபெருமானின் திருநாமம் நந்தி. நந்தி நாமம் நமச்சிவாயவே என்பார் திருஞானசம்பந்தர். துர்வாசருடைய மாணவரான சிலாத முனிவர், வசிட்டரின் சகோதரி சாருலட்சணையை மணந்து கொண்டு குழந்தை வரம் வேண்டி தவம் இருந்தார். இவரது தவத்துக்கு மனம் இரங்கிய ஐயாறப்பர் அருளிய வாக்கின்படி, சிலாத முனிவர் வேள்வி செய்த நிலத்தை உழுத போது ஒரு செப்பு பெட்டகம் கிடைத்தது. அதில் சிவ வடிவுடன் கூடிய குழந்தை கிடைத்தது. அந்தக் குழந்தைக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டப்பட்டது. சிவபெருமான் செப்பேசருக்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கங்கையின் நீர், இறைவியின் கொங்கைநீர், இடப வாய் நுரை நீர் ஆகிய ஐந்து வகை தீர்த்தங்களால் அபிசேகம் செய்து, தங்கப்பட்டம் அணிவித்து நந்தீஸ்வரர் எனப்பெயர் சூட்டினார். அத்துடன் இறைவன் தமக்குச் சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு தலைமை தாங்கும் பதவியையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும் நந்திகேஸ்வரருக்கு வழங்கினார். இறைவன் நந்தீஸ்வரருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி திருமழப்பாடியில் வசித்து வந்த வசிட்டரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்சாம்பிகை என்ற பெண்ணை பேசினார். நந்தீஸ்வரருக்கும், சுயம்சாம்பிகைக்கும் பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் திருமணம் நடந்தது. இதற்காக திருவையாறில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருமழப்பாடிக்கு, நந்தீஸ்வரர் குதிரை வாகனத்திலும், ஐயாறப்பர் சமேத அறம் வளர்த்த நாயகி வெட்டிவேர் பல்லக்கிலும் செல்லும் நிகழ்ச்சி இன்றளவும் நடைபெறுகிறது.b அவர்களை திருமழப்பாடியில் வீற்றிருக்கும் இறைவன் வைத்தியநாதரும், இறைவி சுந்தராம்பிகையும் கண்ணாடி பல்லக்கில் வந்து மாப்பிள்ளை வீட்டாரை எதிர் கொண்டு அழைக்கின்றனர். அன்று மாலை நந்தீஸ்வரர், சுயம்சாம்பிகை திருமணம் தாலி கட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது. பின்னர் புதுமணத் தம்பதிகளுடன் இறைவன் ஐயாறப்பர், தர்ம சம்வர்த்தினி திருவையாறு புறப்பட்டு வருகின்றனர்.

திருவையாறை புராதனமாக கொண்டு திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம் ஆகிய ஏழு ஊர்களில் வலம் வருதலே சப்தஸ்தான விழாவாகும்.
திருமழப்பாடியில் நந்தி பெருமானுக்கு சுயம்சாம்பிகையை ஐயாறப்பர் திருமணம் செய்துவைத்தார். அந்த திருமணத்துக்காக திருப்பழனத்தில் இருந்து பழ வகைகள், திருச்சோற்றுத்துறையில் இருந்து உணவு வகைகள், திருவேதிக்குடியில் இருந்து வேத பிராமணர்கள், திருக்கண்டியூரில் இருந்து ஆபரணங்கள், திருப்பூந்துருத்தியில் இருந்து மலர்கள், திருநெய்தானத்தில் இருந்து நெய் வந்தன.
அதற்கு நன்றி செலுத்தவும்,, ஏழூர்களில் உள்ள ஏழு முனிவர்களாகிய * சிலாதராசிரமம் - திருவையாறு, 
* கவுசிகா ஆசிரமம் - திருப்பழனம்
* கவுதமராசிரமம் - திருச்சோற்றுத்துறை,
* வியாசராசிமம் - திருவேதிக்குடி,
* சத்தபராச்சிரமம் - திருக்கண்டியூர்,
* காசிய பராசிரமம் - திருப்பூந்துருத்தி,
* பிருகு முனிவர் - திருநெய்தானம்
ஆகிய ஆசிரமங்களுக்கு சென்று அவர்களிடம் ஆசி பெறுவதற்காக புதுமண தம்பதிகளை அழைத்துச்செல்வதே ஏழூர் வலம் வருதலின் நோக்கமாகும்.

பூம்பாவையை உயிர்ப்பித்த சம்பந்தர்
சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்ற வணிகர் இருந்தார். அளவு கடந்த சிவ பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற மகள் இருந்தாள். திருஞான சம்பந்தரின் புகழைக்கேட்ட அவர், தனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணி இருந்தார். போதாத காலம் பூம்பாவை நந்தவனத்தில் பூக்களை பறித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு பாம்பு தீண்டி இறந்து விட்டாள். சிவநேசர் மனம் கலங்கினார். மகளின் உடலை தகனம் செய்து பெற்ற சாம்பலையும், எலும்பையும் சேர்த்து பொற்குடத்தில் இட்டு வைத்து இருந்தார். அவர் எதிர்பார்த்த படி திருஞானசம்பந்தர் அவ்வூருக்கு வந்தார். மயிலாப்பூரில் பூம்பாவை இறந்த செய்தியையும் சிவநேசர், எலும்பையும் சாம்பலையும் பொற்குடத்தில் இட்டு வைத்து இருப்பதையும் சம்பந்தர் அறிந்து கொண்டார். சிவநேசரும் சம்பந்தரை சந்தித்தார். பின்னர் சம்பந்தர் எலும்புகளும், சாம்பலும் அடங்கிய பொற்குடத்தை எடுத்து, கபாலீஸ்வரர் கோவிலில் வைத்தார். அன்று கபாலீஸ்வரர் கோவில் உற்சவ தினத்தில் ஒன்பதாம் நாள். பங்குனி உத்திர திருநாள்.அந்த இனிய திருநாளில் சம்பந்தர் ஒரு தேவாரப் பதிகத்தைப் பாடினார்.

"மலிவிழா வீதிமட நல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான்
கபாலீச்சரம்மர்ந்தான் பலிவிழாப் பாடல்செய்
பங்குனியுத்தரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்..."

என்று தொடங்கும் திருப்பதிகத்தை பாடினார். அப்போது அங்கு அதிசயம் நிகழ்ந்தது. பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வந்தாள். அவளை மணந்து கொள்ளும்படி சிவநேசர் கேட்டுக்கொண்டார். ஆனால் உயிர் கொடுத்தவர் தந்தைக்கு சமம் என்பதால், பூம்பாவையை திருமணம் செய்ய சம்பந்தர் மறுத்து விட்டார். இதன் மூலம் சம்பந்தர் காலத்திலும், பங்குனி உத்திரவிழா சிறப்புற்று விளங்கியது தெரிய வருகிறது.
சுந்தரமூர்த்தி நாயனாரும், அவருடைய துணைவியார் பரவை நாச்சியாரும் கூட பங்குனி உத்திர விழாவை சிறப்பாக கொண்டாடியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

Sunday 29 January 2017

ஆதிபராசக்தி



ஆதிசக்தி அல்லது ஆதிபராசக்தி என்பவள் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவள். தன்னையே சிவம் சக்தி என இரண்டாகப் பிரித்து ஜோதியும் அதன் வெப்பமுமாக விளங்குபவள். சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும். தாய் தெய்வ வழிபாட்டின் மிகப்பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது. இதனால் அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார்.
முப்பெரும் தேவியரான கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியோர் ஆதிசக்தியின் அம்சமாகவே இந்து தொன்மவியல் நூல்கள் உரைக்கின்றன. அத்துடன் திருமால் ஆதிசக்தியின் ரூபம் என்பதாலேயே மோகினி அவதாரம் எடுத்து சிவபெருமானுடன் ஐயப்பன் என்ற குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சக்தி அவதாரங்கள்.
ஒரு சமயம் தட்சனின் கடுந்தவத்திற்கு இனங்க ஆதிசக்தி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்தார். ஆனால் மாயையாலும், தட்சனின் மறுப்பாலும் யாகத்தில் விழுந்து மறித்தார். பதிவிரதையான தாட்சாயிணியின் சரீரம் அக்னியால் ஒரு துளியும் சுட முடியாததால் அதனைச் சுமந்து ஈசனிடம் ஒப்படைத்தான். சிவனோ அதனைத் தன் கழுத்தில் சுமந்து ருத்ர தாண்டவம் ஆட அண்டமெல்லாம் இடியும் நிலை உண்டானது. ஆகவே, திருமால் தனது சக்கராயுதத்தை ஏவி சக்தியின் உடலை பல துண்டுகளாக அறுத்து புவி எங்கும் விழச்செய்தார். அப்படி விழுந்த இடங்களே சக்தி பீடங்கள் ஆயின.சக்தி பீடங்கள் 108 ஆகும். அவைகளில் 64 முதன்மையானவை. அவையிலும் 51 மிகப் பிரசித்திப் பெற்றவை
பார்வதி, தாட்சாயினி, காளி, துர்கை என அவள் இல்லாத இடமே இல்லை.எல்லாமுமான சிவத்தையே சிருஷ்டித்து தனது வல்லமையை (சக்தியை) அளித்து இயங்கச்செய்வதால் இவளைச் சக்தி என்று திரிலோகமும் போற்றுகிறது.

பார்வதி தேவி.
சிவபெருமானுக்கு மீண்டும் வல்லமை அளித்து அவரோடு இணைய ஆதி சக்தி, மீண்டும் பூமியில் பர்வதராஜன் மைனாகுமாரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். இவர் பார்வதி தேவி என்று அறியப்படுகிறார். மிகக் கடுமையாக தவமிருந்து யோகசத்திகளை பெற்று சிவனை மணந்தார். சிவன் பார்வதி தம்பதியரின் முதல் குழந்தையாக விநாயகர் அறியப்படுகிறார். கயிலை மானோசரோவரில் பார்வதி தேவியார் குளிக்க செல்லும் பொழுது மானசீகமாக ஒரு குழந்தையை உருவாக்கி காவலுக்கு வைத்தார். அங்கு வந்த சிவபெருமானை தந்தை என அறியாது அக்குழந்தை சண்டையிட சிவன் அக்குழந்தையின் தலையை கொய்தார். பின் பார்வதியின் விஸ்வரூபம் ஆதிபராசக்தியாய் அங்காள பரமேஸ்வரியாய் நவதுர்கையாய் தசமஹாவித்யாவாய் சிவபெருமானோடு அண்டசராசரமும் சுட்டெரிக்க தேவியின் கோபக்கனலைச் சாந்தப்படுத்த எண்ணிய ஈசன் தேவர்களிடம் முதலில் தென்படும் விலங்கின் தலையை கொண்டுவரும்படி ஆனையிட்டார். சிவ பூத கணங்களும் தேவர்களும் யானை தலையை கொண்டுவந்தனர். சிவபெருமான் அதை அக்குழந்தைக்கு அளித்து உயிர்ப்பித்தார். அதனால் ஆனைமுகன் என்று பெயர் பெற்றார். சிவ கணங்களின் அதிபதியாக ஆனைமுகன் விளங்கியமையால் கணபதி என்றும் அறியப்படுகிறார்.
சிவன் பார்வதி தம்பதியரின் இரண்டாவது குமாரன் முருகன் ஆவார். சிவபெருமான் தனது ஆறு முகங்களிலும் உள்ள நெற்றிக் கண்களிலி்ருந்து நெருப்புபொறிகளை தோற்றுவித்தார். அதனை வாயு தேவன் சரவணப்பொய்கை நதியில் சேர்ப்பித்தார். அந்நதியில் நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக ஆனது. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர். அன்னையாகிய பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளை அனைத்த பொழுது ஆறுமுகமும், பன்னிரு கரமும் கொண்ட குமாரனாக அக்குழந்தை ஒன்றினைந்தது. ஆறு முகங்களை உடையதால் ஆறுமுகம் என்றும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால் கார்த்திக்கேயன் என்றும், அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து சக்தி வேலை பெற்றதனால் சக்தைவடிவேலன் என்றும், அழகான குழந்தை என்பதால் முருகன் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானும் பார்வதியும் கயிலையில் மனம் மகிழ்ந்திருந்த பொழுது கரடி ரூபம் கொண்டு கயிலை காடுகளில் மகிழ்ந்ததாகவும், அதனால் சிவரூபமான ஜாம்பவான் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

மீனாட்சி
மீனாட்சி என்பவர் பாண்டிய மாமன்னன் மலையத்துவஜன் மற்றும் காஞ்சனமாலை தம்பதியரின் மகளும் சிவபெருமானின் உருவமான சுந்தரேசரரின் மனைவியும் ஆவார். இவர் தடாதகை பிராட்டி எனவும் அறியப்படுகிறார். இவர் மிகுந்த வீரம் கொண்டவராகவும், தந்தையின் இறப்பிற்குப் பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படை திரட்டி கையிலை வரை சென்று வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கையிலையில் சிவபெருமானை கண்டு வெட்கம் கொண்டு பெண் நிலையை அடைந்ததால் சிவபெருமானையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடவுளுடனான உறவு.
திருமால் :- ஆதிசக்தியின் சகோதரனாக திருமால் போற்றப்படுகிறார்.
நந்தி தேவர் :- சிவபெருமான் முதல் தொண்டனான நந்தி தேவர், ஆதிசக்தியின் மகனுக்கு இணையானவராக கூறப்படுகிறது.

சக்தி விழாக்கள்.
  • நவராத்திரி
நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
  • ஹோலி
  • துர்க்கை பூசை
  • மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.

சக்தி விரதங்கள்.
* ஆடி விரதம்
* வெள்ளிக்கிழமை விரதம்
* காமாட்சி அம்மன் விரதம்
* பச்சைப் பட்டினி விரதம்
* கேதாரகௌரி விரதம் 
* திருவாதிரை நோன்பு

Thursday 26 January 2017

நந்தி தேவர்


புராண செய்திகள்
நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

"செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து
நம்பவமறுத்த நந்திவானவர்"


                               எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின்றது. நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.


பிரதோசம்
பிரதோச கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.

அதிகார நந்தி
நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில் அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.

அதிகார நந்தியும் கருடரும்
கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.
தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.


Friday 13 January 2017

ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்



ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம்நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.


பெயர்க்காரணம்.

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த "சல்லிக் காசு" என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் "சல்லிக்கட்டு" என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து "ஜல்லிக்கட்டு" ஆனது என்றும் கூறப்படுகிறது.

வகைகள்.


சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.


வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.



மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.


வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.

வரலாறு


பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் "கொல்லேறு தழுவுதல்" என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயர்கள்/யாதவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




சங்க இலக்கியமான கலித்தொகை


"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்.

அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து
நைவாரா ஆய மகள் தோள்''


  என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் 
உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்."  என்பதாகும். 
பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.

பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.





சங்க இலக்கியமான கலித்தொகை ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய சல்லிக்கட்டு விளங்குகிறது.



ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் "சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும்". இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.

ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.



தென்மாவட்டங்களின் பங்கேற்பு.

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பெரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது. உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.

தற்காலச் சிக்கல்கள்.

ஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதுவோரும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதுவோரும் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்கு நல வாரியம், பெடா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் இதில் அடக்கம். இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது குற்றச்சாட்டு. 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர்.







ஏறுதழுவல் விளையாட்டில் காளைகளும் வீரர்களும் இறக்கக் கூடும் அல்லது காயமடையக் கூடும். கடந்த காலத்தில் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. சிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமை. ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் போதும் அதைத் தொடர்ந்தும் காயமுற்ற 80 முதல் 100 பேர் மதுரை இராசாசி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறு காயமுற்றோர் சல்லிக்கட்டு நடைபெறுகின்ற அவனியாபுரம், பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் போகிறார்கள்.

சல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுபிடி வீரர்களுக்குப் பல விதங்களில் காயம் ஏற்படக்கூடும்.

தலை: காளையைப் பிடிக்கும் முயற்சியில் கீழே விழுவதால், அல்லது தூக்கி எறியப்படுவதால் தலையில் அடிபடுதல்; முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுதல்.

கழுத்து: காளையின் கொம்பு குத்துவதன் விளைவாக மூச்சுக்குழாயில் துளை ஏற்படுதல்.

தண்டுவடம்: கீழே விழுவதாலோ, காளையால் குத்தப்படுவதாலோ தண்டுவடம் சேதமடைதல்; முதுகின் கீழ்ப்புறத் தசை இறுக்கமுறுதல்.

நெஞ்சு: நெஞ்சில் அடிபடுவதால் நுரையீரல் சேதமடைதல்; விலாவெலும்பு முறிதல்; நுரையீரல் திரைப்பகுதியில் இரத்தம் கட்டுதல்.

அடிவயிறு: காளை முட்டுவதால் மாடுபிடிவீரரின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்படுவது கூடுதலாக நிகழ்கிறது (75 விழுக்காடு); குடல் துளைபட்டுச் சரிதல், கல்லீரல், மண்ணீரல், வயிற்றுப்பகுதி சேதமுறுதல்.

பிறப்புறுப்புப் பகுதி: ஆண் பிறப்புறுப்புப் பகுதியில் மாடுபிடி வீரர்களுக்கு சேதம் ஏற்படுவது வழக்கமாக நிகழ்கிறது. இதனால் சிலர் ஆண்மை இழப்பதும் உண்டு. மேலும் இடுப்பெலும்பு முறிவும் ஏற்படலாம்.

கால்கள்: தொடையெலும்பு மற்றும் காலெலும்பு முறிவோ கீறலோ ஏற்படக்கூடும்.




சல்லிக்கட்டை ஆதரிப்போர் அது தமிழர்களின் பண்பாடாகக் கருதப்படுவதாகவும் அதை அழியவிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். மேலும், அவர்கள் கூறுவது: சல்லிக்கட்டுக் காளையை உழவுக்குப் பயன்படுத்துவது இல்லை. கன்றில் இருந்தே சிறப்பாக வளர்க்கப்பட்டுக் கோவில் மாடாக வழிபட்டு சல்லிக்கட்டுக்கு மட்டும் பயன்படுத்த வளர்க்கப்படுகிறது. நடுவண் அரசு விதித்துள்ள கட்டுப்பாடு யானைக்குக் கூட இல்லை. கேரளத்தில் யானையை வைத்துப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Thursday 12 January 2017

குரு பார்வை கோடி நன்மை

''குரு பிரம்மா குரு விஷ்ணுகுரு தேவோ மகேஸ்வரஹகுரு சாக்ஷõத் பரப்பிரம்மாதஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''
ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான். கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான். சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான். அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான். குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன. சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தனர்.தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது. தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க, குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது. திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி, மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது. குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது. சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான். தன் கணக்கு சரியாகவே இருந்ததுபோலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது? குழந்தை எப்படிப் பிழைத்தது? - தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது. புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார் ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்?சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றான். ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்தபோதும், கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை உணர முடியும். குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள். 

குரு எந்த வீட்டில் அமர்ந்தால் எத்­த­கைய நன்மை கிடைக்கும்?...
குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயு­ளுடன் இருப்­பார்கள். சிறந்த மனைவி அமையும். இவ­ருடன் தொடர்பு வைத்­தி­ருப்­ப­வர்கள் நல்ல ஆன்­மி­க­வா­தி­க­ளாக இருப்­பார்கள். குழந்தை பாக்­கியம் கிடைக்கும். பூர்வ புண்­ணிய பாக்­கியம் கிடைக்கும். இவர்­களின் குழந்­தைகள் சிறந்து விளங்­கு­வார்கள். வாழ்க்­கையில் இவர் நல்ல முன்­னேற்றம் காண்­பார். தந்தை இவ­ருக்கு உதவி புரிவார்.
குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்­சா­ளர்­க­ளாக இருப்­பார்கள். இவர்­களின் வாக்­குக்கு சமு­தா­யத்தில் மதிப்பு இருக்கும். கல்­வியில் சிறந்து விளங்­கு­வார்கள். குடும்­பத்தில் நிம்­மதி இருக்கும். குழந்தை பாக்­கியம் கிடைக்கும். கையி­ருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியா­பா­ரத்தில் சிறந்து விளங்­கு­வார்கள். இவ­ருடன் சேரும் வியா­பார நண்­பர்­களும் நல்ல முறையில் இருப்­பார்கள்.
குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்­தியில் ஈடு­பாடு இருக்கும் இளைய சகோ­தரருக்­கு நல்ல முன்­னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவ­ருக்கு நன்மை கிடைக்கும். எதிர்­பா­லி­ன­ரிடம் மோகம் இருக்கும். அள­வோ­டுதான் மகிழ்ச்சி இருக்கும்.
குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்­துடன் இருப்பார். குழந்தை பாக்­கியம் தாம­த­மாக இருக்கும். குழந்­தைகள் மூலம் நல்ல விஷ­யங்கள் நடக்­காது. பகை­வர்களை உண்­டா­கு­வார்கள். விவ­சாய சம்­பந்­த­பட்ட குடும்­ப­மாக இருந்தால் விவ­சாயம் மூலம் நல்ல வரு­மானம் இருக்கும்.
குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்­தி­ர­பாக்­கியம் கிடைக்கும். புத்­தி­ரர்­களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்­ணிய அறிவு இருக்கும். குல­தெய்­வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பண­வ­ர­வுகள் இருக்கும்.
குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகை­வரை வெற்றி கொள்­ளலாம். சமு­தா­யத்தில் மதிப்பு இருக்­காது. குழந்தை பாக்­கியத்தில் தடையை ஏற்­ப­டுத்­துவார். மங்­க­ள­க­ர­மான நிகழ்ச்­சிகள் நடை­பெற தாமதமாகும். உடம்பு பலம் இழந்து காணப்­படும்.
குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்­கி­னத்தை பார்ப்­பதால் உடல் நிலை நன்­றாக இருக்கும். சமு­தா­யத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனை­வி­யாக வரு­பவர் ஆன்­மிக சம்­பந்­தப்­பட்ட குடும்­ப­மாக இருக்கும். மனை­வியும் ஆன்­மிக விஷ­யங்­களில் நாட்டம் உள்­ள­வ­ராக இருப்பார். இவர்­க­ளிடம் தொடர்பு வைத்தி­ருப்­ப­வர்கள் நல்ல மத­கு­ரு­மார்­க­ளாக இருக்க வாய்ப்பு உண்டு.
குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமை­வது கஷ்­ட­மாக இருக்கும். திரு­மணம் முடிந்தால் மனை­வியின் உடல்­நிலை பாதிக்­கப்­படும். செல்வ நிலை இருக்கும். சோதி­டத்­து­றையில் நல்ல அறிவு ஏற்­படும். மரண வீட்டை குறிப்­பதால் உயிர் வதை இல்­லாமல் உடனே போகும்.
குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்­கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பத­வியில் இருப்பார். ஆன்­மி­கத்தில் சிறந்து விளங்­குவார். மிகப்­பெ­ரிய மடா­தி­ப­தி­களின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்­புகள் எல்லாம் படிப்­பார்கள். வெளி­நா­டுகள் செல்ல வைப்பார். வெளி­நாட்டு தொடர்பு மூலம் பண­வ­ர­வுகள் இருக்கும். குல­தெய்வ அருள் இருக்கும். மந்­திர வித்தை நன்­றாக இருக்கும்.
குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அர­சாங்­கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்­றிய வட்­டா­ரங்­களில் மதிப்பு இருக்கும். வரு­மா­னத்தை பெருக்­குவார். கோவில் சம்­பந்­தப்­பட்ட இடங்­களில் வேலைக்கு அமர்த்­துவார்.
குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வரு­மானம் இருக்கும். மூத்த சகோ­தர சகோ­த­ரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்­பர்கள் அமை­வார்கள். வாகன வச­திகள் ஏற்­படும். எந்த வேலையை எடுத்­தாலும் வரு­மா­னத்­திற்கு குறைவு இருக்­காது. குழந்தை பாக்­கியம் இருக்கும்.
குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுக்­கத்தை கடை­பி­டிக்க மாட்டார். புண்­ணிய இடங்­க­ளுக்கு அடிக்­கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்­கி­யத்தில் குறை இருக்கும். சில பேர் பக்­தி­மான்கள் போல் நடிப்­பார்கள். கோவில் கட்­டுதல், ஆறு குளம் வெட்­டுதல் போன்­ற­வற்றில் ஈடு­பட வைப்பார். பண­ வி­ரையம் ஏற்­படும்.
குரு பக­வானால் ஞாப­க­ம­றதி, காது­களில் பாதிப்பு, குடல் புண், பூச்­சி­களால் பாதிப்பு, பிரா­ம­ணர்கள் மற்றும் பெரி­யோர்­களின் சாபத்தால் உடல் பாதிப்பு, கோவில் விவ­கா­ரங்­களில் ஈடு­ப­டு­வதால் உடல்­நிலை பாதிப்பு, வறு­மையால் உடல்­நிலை பாதிப்பு போன்­றவை உண்­டாகும்.
ஒருவர் நல்­ல­வரா ? கெட்­ட­வரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும். ஒரு­வ­ருக்கு எந்த அளவு அதிர்ஷ்­டத்தை வழங்­கலாம் என்று நிர்­ண­யிப்­பவர். வியா­ழக்­கி­ழமை விரதம் கடை­பி­டித்தால், குரு பக­வானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம்.
குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் கடைபிடிக்க வேண்டும். வெண் முல்லை மலர் சாற்றி குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.
"குருவே சரணம்"

Wednesday 11 January 2017

காலனை உதைத்த கால்!


" வெறி கொண்ட காலனை உதைத்த கால் உனது கால் ,
 அதனால் தூக்கி நின்றான் " .

காலனை உதைத்த கால் உமையவளுக்குச் சொந்தமான இடது கால் அதனால் அதற்கு மதிப்புக் கொடுப்பது போல , நடராஜர் , காலைத் தூக்கி ஆடியபோது , அந்தக் காலைத் தூக்கி ஆடினார் என்று இதற்குப் பொருள். கருணையின் வடிவமே உமையவள். அவளை வணங்கினால் நாம் எல்லா நலன்களும் பெறலாம். அவள்தான் மதுரையில் மீனாட்சியாகப் பிறக்கிறாள் . மதுரையை ஆண்ட அவள் திக் விஜயம் கிளம்புகிறாள். பூவுலகில் அவளை எதிர்த்து நிற்பார் யாருமில்லை . எல்லாரும் சரண் அடைந்து விடுகிறார்கள். உடனே, மீனாட்சி அஷ்டதிக் பாலகர்கள் மீது பாய்கிறாள் .அவர்களும், சரணடைகிறார்கள். கடைசியில் தென் திசைக் காவலனான யமனாவது தன்னை எதிர்த்து நிற்பானா என்று நினைக்கிறாள் .
அவனோ , அவள் காலில் விழுந்து 
   "தாயே! எனக்கு உயிர் கொடுத்த உமையவளே! உன்னை நான் எதிர்த்துப் போரிடலாமா! அது நீதியாகுமா! அப்படி எதிர்த்துப் போரிட்டாலும் உன்னை நான் வெல்ல முடியுமா! " 
                                                                                                 என்று கேட்கிறான் .
             "நான் உனக்கு உயிர் கொடுத்தேனா! எப்பொழுது?" 
                                                                               என்று கேட்கிறாள் மீனாட்சி .


                                      "ஏனம்மா! மார்க்கண்டேயரை மறந்து விட்டாயா? அவருக்குக் கொடுக்கப்பட்ட பதினாறு வயது ஆயுள் முடிந்துவிட , அவர் உயிரை எடுக்க நானே வந்தேன். அப்பொழுது, அவர் சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ள, நான் அதையும் சேர்த்து என் பாசக் கயிற்றினால் இழுத்தேன். அதைக் கண்டு கோபம் கொண்ட சிவன் என்னை உதைக்கப் போனார். பிறர் உயிரை வாங்கும் என் உயிரையே அவர் வாங்கிவிடுவாரோ என்று நடுங்கினேன். உன்னை மனதார வேண்டிக் கொண்டேன். அதன் காரணமாக, அவர் என்னை உதைத்த கால் உனது கால், ஆதலால் நான் பிழைத்தேன்" 
                                                             என்கிறான் யமன் .இதைக் கேட்டு மீனாட்சி அவன் மீது கருணை கூர்கிறாள். அந்த கருணைதான் அவளைச் சிவனைச் சந்திக்கச் செய்து, அவனோடு மணம் முடித்து வைக்கிறது .

Monday 9 January 2017

பிறவாப்பெருவாழ்வு தரும் வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியில் திசம்பர்-சனவரி மாதங்களில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.
மோகினி   அலங்கார  தத்துவம் 
வைகுண்ட ஏகாதசியின் போது பகல்பத்து திரு நாளில் 10–ம் திருநாள் எம்பெருமான் மோகினி அலங்காரத்துடன் காட்சி தருவார். மனிதன் வாழ்வில் மண், பொன், பெண் ஆசைகளை கடக்க முடியாது. இதில் பெண்ணாசையை வெல்வது கடினம். திருப்பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை அசுரர்களுக்கு கிடைக்காமல் செய்வதற்காக திருமால் மோகினி வேடம் தாங்கினார். அதில் மயங்கிய அசுரர்கள் அமிர்தத்தை இழந்தனர். பெண்ணாசையால் மதி இழக்காமல் இறைவன் காட்டிய மார்க்கத்தில் சென்றால் வைகுண்டம் நிச்சயம் என்பதை பக்தர்களுக்கு ரெங்கநாதர் உணர்த்துகிறார். இதுவே மோகினி அலங்கார தத்துவமாகும்.

தங்க  பல்லியை வணங்கும்  பக்தர்கள் 
ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கும் போது பக்தர்கள் கூட்டம், கூட்டமாக உள்ளே செல்வார்கள். அப்போது வாசலுக்கு மேலே சிற்ப வடிவமாக இரண்டு தங்க பல்லிகள் பதிக்கப்பட்டிருக்கும். அதை பக்தர்கள் பயபக்தியுடன் வணங்குவார்கள். அதாவது பல்லி புவி ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்படாமல், தானே சுற்றுச்சுவர்களிலும், மேற் சுவர்களிலும் வேகமாக ஊர்ந்து செல்லும் இயல்புடையதாகும். அது போல பக்தர்கள் உலக பந்தங்களில் பற்று வைக்காமல், விலகி சென்றால் இறைவனின் சொர்க்கவாசல் அவர்களுக்கு கிடைக்கும் என்பதே அதன் தத்துவம்.
சமய நம்பிக்கை
இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.

சொர்க்கவாசல் திறக்கப்படுவது  ஏன்?

சொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் கூறப்படும் கதை வருமாறு:–

அவதார புரு‌ஷரான எம்பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக்கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது. 


பகவத்கீதை  உபதேசித்த  தினம்
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த குருஷேத்திர யுத்தத்தின்போது அர்ச்சுனன் மனம் தளர்ந்து காண்டீபம் வில்லை கீழே வைத்து விட்டு போரிட மறுத்து விடுகிறான். வைகுண்ட ஏகாதசியன்று  பகவான் கண்ணன், அர்ச்சுனனுக்கு பகவத்கீதையை உபதேசம் செய்தார். 
சொர்க்கத்தை விரும்பாத  அனுமன்
ஸ்ரீராமதூதன் அனுமன் ராமனுக்கு சேவை செய்வதையே தன் பிறவிக் கடன் என நினைப்பவர். அனுமனுக்கு அருள் செய்ய நினைத்த ராமர் அனுமனை பார்த்து, ‘நீ பரமபதத்துக்கு (சொர்க்கம்) வருகிறாயா?’ என்று கேட்டார். அதற்கு அனுமன் இந்த பூவுலகம் உங்கள் பாதம் பட்டதால் புண்ணிய பூமி ஆயிற்று. அமிர்தத்தைவிட மேலான ராமநாமத்தை சொல்லி பரமபதத்தில் கூத்தாட முடியாது. எந்த சிறப்புமே இல்லாதது பரமபதம். பூமியில் உங்கள் திருப்பெயரைச் சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியாக இருப்பேன். பரமபதத்துக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டார். ராமனும் அனுமனின் பக்தியை கண்டு மகிழ்ந்து என்றும் அழியாமல் இருக்கும் சிரஞ்சீவி பட்டத்தை வழங்கினார். அஸ்வத்தாமர், மகாபலி, வியாசர், அனுமன், கிருபாச்சாரியார், பரசுராமர், விபீ‌ஷணர், மார்க்கண்டேயர் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் ஆவர். 
திருவரங்கத்தில்
தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது. ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரம்பத வாசல்", சொர்க்க வாசல்" என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.

திருமலையில்
ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது. எனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்களும் உயர்நிலையாளர்களும் திரள்கின்றனர்.

தீபஜோதியில்   ஜொலிக்கும் குருவாயூரப்பன்   கோவில்
கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை விருட்சிக ஏகாதசி என்ற பெயரில் கொண்டாடுவர். குருவாயூரில் ஏகாதசி விழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது தீப ஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றி கோவிலை சொர்க்கலோகம் போல மாற்றி கொண்டாடுவர். 
ஏகாதசியன்று காலை 3 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோவில் திறந்தே இருக்கும். ஏகாதசியன்று குருவாயூரப்பனை தரிசித்தால் சொர்க்க வாசலை மிதித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 
சொர்க்கவாசல்  திறக்காத பெருமாள்  கோவில்கள்
* கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. மகாலட்சுமியை மணமுடிப்பதற்காக திருமால் வைகுண்டத்தில் இருந்து தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். இங்கு உத்திராயன, தட்சிணாயன வாசல்கள் தனித்தனியாக உள்ளன. இந்த வாசல்களை கடந்து சென்றாலே பரமபதம் (மோட்சம்) கிடைக்கும் என்பது ஐதீகம். 

* அதேபோல திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாசன் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவியை மணமுடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக வந்ததால் இக்கோவில் பூலோக வைகுண்டமாக திகழ்கிறது. இங்கும் வைகுண்ட ஏதாசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. தாயார் நாமம் செங்கமலதாயார். இங்கும் தட்சிணாயன, உத்தராயண வாசல் உள்ளது. திருச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.


ஆருத்ரா தரிசனம்


மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். அவற்றுள்  சிதம்பரத்தில்  நடப்பது  மிகவும்  சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.
ஐதீகக் கதை
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.

சேந்தனார் வரலாறு
சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.
ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார். 


மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்து கொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும்   வந்திருந்தார்.
எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.
சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.


நோன்பு நோற்கப்படும் முறை
திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன்  என்றும்  ஆதிரையான்  என்றும் கூறுவர்.

மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.
விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாரணஞ் செய்வர். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார்.:
"ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"
திருநாவுக்கரசரும் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை விழாவின் சிறப்பினையும் அழகையும் பின்வருமாறு பாடியுள்ளார்.
"முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பக்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தனாரூ ராதிரை நாளா லதுவண்ணம்"
சங்சரசங்கிதை என்னும் வடமொழி நூலின் உபதேச காண்டத்தில் இந்நோன்பின் மகிமை கூறப்பட்டுள்ளது. கச்சியப்ப சிவாசாரியாரின்  மாணாக்கராகிய கோனேரியப்ப முதலியார் தமிழில் இதனை மொழி பெயர்த்துள்ளார்.

திருவாதிரைக் களி
திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ''திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி'' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்.